Fr-Francis Culas

‘வங்கம் தந்த தங்கம் – அமரர் அருட்பணி
பிரான்சிஸ் குலாஸ் ழுஆஐ’

 

 

‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்’
என்கின்ற மறைபொருள் உண்மையை இவ்வுலகில் நிலைபெற மெய்ப்பித்து – பூவுலகின் கடைமைகளை நிறைவு செய்து விண்ணுலகில் அவதரித்திருக்கும் எம் அருட்தந்தை ‘அமரர் அருட்பணி பிரான்சிஸ் குலாஸ் ழுஆஐ’  அவர்கட்கு நாம் எமது பிரார்த்தனைகளைச் சமர்ப்பித்துக்கொள்கின்றோம்.
வங்கம் தந்த தங்கம் இவர். வைரம் பாய்ந்த நெஞ்சு, கம்பீரத் தோற்றம், நிமிர்ந்த நடை, மின்னல் வெட்டியது போன்ற சிரிப்பு, எல்லாவற்றிற்கும் மேலாக நல்ல உள்ளம். இன்று எம் மத்தியில் இல்லை. இறை செய்தியை உரைத்த சிம்மக் குரல் இன்று ஓய்ந்துவிட்டது.
1924ம் ஆண்டு புரட்டாதி மாதம் 12ம் திகதி இலங்கைத் திருநாட்டின் மாதோட்டத்தில் மன்னார் மறைமாவட்டத்திலுள்ள மங்காப்புகழ் கொண்ட வங்கம் தங்கும் காலையாம் வங்காலை நெய்தல் நிலத்தில் க. அந்தோனி குலாஸ், மேரி கத்தரின் பீரிஸ் ஆகிய தம்பதியரிற்கு மூத்த புதல்வராய் அவதரித்தார். இவரது குடும்பமோ இறையாசி பெற்ற ஓர் குடும்பமாகும். இறைவனிற்கு பணிபுரிவதையே இவ்வுலகவாழ்வின் இன்பமாகக் கொண்டு வாழ்ந்துவரும் கண்ணியமான குடும்பமாகும். இக் குடும்பத்தினை அலங்கரிப்போராக அருட்பணியின் இளைய சகோதரர் ஆசிரியராக மகத்தான பணியாற்றி அமரத்துவம் அடைந்துவிட்டார்.  இன்னொரு சகோதரி ஆசிரியராக அரும்பணியாற்றி ஓய்வுநிலை ஆசிரியராகவே உள்ளார். இன்னும் இரு சகோதரிகள் அருட்சகோதரிகளாக அரும்பணியாற்றி வருவது இன்னொரு தனிச்சிறப்பு. இத்தகைய ஆன்மீகம் ததும்பும் ஓர் பக்திமிக்க குடும்பமாக இருப்பது இறைவனின் அருட்கொடையே.
அமரர் அருட்பணி பிரான்சிஸ் குலாஸ் அடிகளாரின் ஆரம்பக் கல்விப்பயணம் சொந்த ஊரான வங்காலை சென். ஆன்ஸ் றோமன் கத்தோலிக்கப் பாடசாலையில் தொடங்கி – யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரிவரை பயணித்தது. தனது 16வது வயதினிலே இறைவனின் நாமத்துடன் அவரிற்காகவும்  மக்களிற்காகவும் தன் வாழ்வை அர்ப்பணிக்க விரும்பி இறை சேவையிற் தன்னை இணைத்துக் கொண்டார். 1939ல் புனித மார்ட்டின் செமினரியிலும், 1945ல் பம்பலப்பிட்டி புனித பிரான்ஸிஸ் சேவியர் மடத்திலும் சேர்ந்து 1950 வரையில் இறையியல்சார் கல்வியை வழுவின்றிக் கற்றுக்கொண்டார். 17.08.1951ல் சொந்த ஊரான வங்காலை புனித ஆனாள் ஆலயத்தில் ஊரின் முதற் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு வரலாறு படைத்தார். 1951ற் தொடங்கிய இறைபணி தங்கு தடையின்றி தொடர்ந்தது. நாட்டின் பல பகுதிகளிலும் பங்குத்தந்தையாக இருந்து பணியாற்றினார். பணியாற்றிய தேவாலயங்களின் பட்டியல் மிக நீளமானது. ஏறக்குறைய 30ற்கும் மேற்பட்ட ஆலயங்களில் இவரது பணி மகத்தான முறையில் அமைய இறைவன் அருள் புரிந்தார். நீர்கொழும்பு, சில்லாலை, ஊர்காவற்துறை, தாளையடி, முல்லைத்தீவு, சாவகச்சேரி, நெடுந்தீவு…. இவற்றுட் சில.
ஆடம்பரங்களையும், புகழ்ச்சிகளையும், மேடைமாலைகளையும் இவர் என்றும் விரும்பியதில்லை.  இவரது இறைபணி எளிமையாகவே இருந்தது.  சமய நெறிகளிலிருந்தும், அறநெறிகளிலிருந்தும் சற்றேனும் விலகாது தடம்புரளாது தனது இலட்சியத்தை இறைவனின் சித்தப்படியும் அவரது ஆசியுடனும் வெற்றிகரமாக நிறைவேற்றினார். 2001ல் பொன்விழாவையும், 2011ல் மணிவிழாவையும் தமது மக்கள் முன் கொண்டாடினார். காலம் வந்ததும் இறைவன் இவரைத் தம்மோடு அணைத்துக் கொண்டார். தள்ளாத வயதிலும் இறை செய்தியைப் பரப்பிய பெருவிருட்சம் 22.09.2011 அன்று சாய்ந்துபோனது. எமக்கெல்லாம் அதிர்ச்சிதான்.
குருவாக மட்டுமன்றி பாரதி கூறியதுபோல நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய், பண்பிலே தெய்வமாய், பார்வையிலே சேவகனாய்…… எங்கள் ‘குலாஸ்சுவாமி’ வாழ்ந்து மறைந்து இறைவனடி சேர்ந்துவிட்டார்.
இவரிடம் நாம் கண்ட இயல்புகள்,…. சாதாரணமாக நடந்தே பயணிப்பார், சில சமயம் பழைய சைக்கிள் ஒன்றில் சவாரி செய்வார். மோட்டார் சைக்கிளை இவர் முறுக்கியதுமில்லை, குளு குளு காரில் பயணித்ததைக் கண்டதுமில்லை. யாழ் சங்குப்பிட்டி பாதையூடாக இவரது பஸ் பயணம் அமைந்திருக்கும். இதனால் ‘சங்குப்பிட்டி’ எனச் செல்லமாக இவரை அழைப்பதுமுண்டு.
இவரது பலிபீடப்பிரசங்கம் அலாதியானது. அடுக்கு மொழிகளோ, அதிரடி வசனங்களோ இவரது உரையில் இருக்காது. சாதாரண உரையாடற்பாணியில் இவரது பிரசங்கம் இருக்கும். அதில் ஆழமான கருத்துக்கள் செறிந்திருக்கும். இன்றைய கணணியுகம், உலகமயமாதல், தகவற் தொழில்நுட்பத்தின் தாக்கங்கள் பற்றிய விடயங்கள் எல்லாம் இவரது உரையில் இழையோடி இருந்தமை அதிசயமானதுதான்.
ஓய்வின் பின்னர் தள்ளாத வயதிலும் தமது சபையுடனேயே இருந்து தம் வாழ்வை அர்ப்பணிக்க விரும்பி செயலிலும் செய்து காட்டிய மாமனிதர் இவர். வங்காலைக் கிராமத்தின் முதற் குருவாக உதித்து பலகுருக்களை உருவாக்க அடித்தளமிட்டவர் இவரே. இவரது பலமான அத்திவாரத்திற் கட்டியெழுப்பப்பட்ட ஆன்மீகக் கோபுரம் என்றும் நிமிர்ந்து நிற்கும் என்பது எமது அசையாத நம்பிக்கை.
‘இவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்’

கலாநிதி ஏ.எஸ். ஆனந்தன்

Comments are closed.